புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடல் இசைக்கப்பட்டபோது அதை பாதியிலேயே நிறுத்தச் சொல்லி சைகை காட்டியதாகக் கூறி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது பாஜக சார்பில் கர்நாடக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பு வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டபோது, சோனியா மற்றும் கார்கே சுற்றியிருந்தவர்களை நோக்கி சைகை செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தும்படி சோனியா சைகை செய்ததாக பாஜக குற்றம் சாட்டியது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கார்கே நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்ததால் அவருக்கு நாற்காலி வழங்குமாறு சோனியா சைகை செய்ததாகவும், வந்தே மாதரம் பாடலுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள உர்வா காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகி விகாஷ் புத்தூர் புகார் அளித்துள்ளார். தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
