சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தவும், புதிதாக 20 தாலுகாக்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் 26 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த 100 நாட்களில் 39.26 லட்சம் பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பத்திரப்பதிவுக்கு விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். போதிய மழைப்பொழிவு இல்லாததால் செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு வறட்சி நிவாரணம் மற்றும் வறட்சி மாவட்டங்கள் தொடர்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ரூ.83 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். பேரிடர் சூழல்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு முன்கூட்டியே ரூ.50 கோடி வழங்கப்படும். மேலும், விருந்தினர்கள், குழுக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான செலவுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள ரூ.6.85 கோடி ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
