சென்னை: தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க பிரத்யேக என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி அதிகாலை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபீன் உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முகம்மது தல்ஹா, குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி காரை வாங்கி ஜமேஷா முபீனிடம் வழங்கியதாக கூறி கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது, முறையான ஆவணங்கள் இல்லாமல் காரை வாங்கி முக்கிய குற்றவாளியிடம் வழங்கியதற்கும், தாக்குதலுக்கு முன்பு நடைபெற்ற சதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றதற்கும் ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், ஐ.எஸ். ஆதரவு கருத்துகள் தொடர்பான ஆதாரங்கள் அவரது மின்னணு சாதனங்களில் இருப்பதற்கான முகாந்திரமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முகம்மது தல்ஹாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில் நிலுவையில் உள்ள பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க பிரத்யேக என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒரு ஆண்டுக்குள் பயங்கரவாத வழக்குகளின் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய உள்துறை செயலர் மற்றும் தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலரை தாமாக முன்வந்து வழக்கில் இணைத்த நீதிமன்றம், செப்டம்பர் 24-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
