கோவை: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் பேரிடர் பாதிப்புகளுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.1 கோடி வழங்கப்படும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அறிவித்துள்ளார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற ‘நேபாளத்துடன் தோளோடு தோள் கொடுப்போம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்குரு, இமயமலைப் பகுதி இயற்கை ரீதியாக பல நாடுகளுடன் தொடர்புடையது என்றும், இதனை பாதுகாக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசியல் எல்லைகளைக் கடந்து நிற்கும் இமயமலைப் பகுதி மிகவும் பிரம்மாண்டமானது. மலைகளுக்கு நாட்டின் எல்லையோ, மொழியோ தெரியாது. எனவே, இமயமலை பாதுகாப்பில் நிர்வாக ரீதியாக இணைந்து செயல்பட முடியாவிட்டாலும், ஆலோசனைகளை மேற்கொள்ளும் அமைப்பு தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
பனிப்பாறையின் பெரும்பகுதி சரிந்து விழுந்த இந்த அசாதாரண பேரழிவை யாராலும் எதிர்பார்த்திருக்க முடியாது என்றும், சிறிய நாடான நேபாளத்தால் மட்டும் இத்தகைய பெரிய பேரழிவை எதிர்கொள்வது கடினம் என்றும் சத்குரு கூறினார்.
எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக இமயமலையை பகிர்ந்தளிக்கப்பட்ட இயற்கை அமைப்பாக கருதி அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இமயமலைப் பிராந்திய பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா, சீனா, பாகிஸ்தான், நேபாளம், பூடான் ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘இமாலயன் போர்டு’ போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் சத்குரு முன்மொழிந்தார்.
இதற்கிடையே, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஈஷா அறக்கட்டளை ஒருங்கிணைத்த கைலாய யாத்திரைக்கு சென்ற 77 யாத்ரீகர்கள் மற்றும் நேபாளப் பகுதியில் பணியாற்றிய 3 ஈஷா தன்னார்வலர்களும் காணாமல் போனவர்களின் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
