ஷாம்லி: ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 முக்கிய ஷார்ப்ஷூட்டர்கள் உத்தரபிரதேசத்தின் ஷாம்லியில் போலீசாருடன் நடந்த என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஹரியானாவின் சோனிபட் பகுதியைச் சேர்ந்த மோஹித், 22, மற்றும் சுமித், 24, ஆகிய இருவரும் அங்கித் பாலியன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஷாம்லி போலீசாருக்கு கைரானா சாலையில் உள்ள இந்தியன் கேஸ் கிடங்கு அருகே சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று இருவரையும் சுற்றிவளைத்தனர்.
அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற இருவரும் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நடத்திய பதில் துப்பாக்கிச்சூட்டில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் ஷாம்லி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அங்கித் பாலியன் கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி மாலை ஷாம்லி கோத்வாலி பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்து வெளியே வந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 ஆயுதமேந்திய நபர்கள் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அங்கித் பாலியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடலில் 5 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்ததாகவும், அதில் 2 குண்டுகள் தலையில் பாய்ந்ததாகவும் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
இந்த கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
