சென்னை: நடிகை த்ரிஷா லண்டனில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவர் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ராஜா கிருஷ்ணா மேனன் இயக்குகிறார். இவர் இதுவரை 5 இந்தி படங்களை இயக்கியுள்ளார். அக்ஷய் குமார் நடித்த ‘ஏர்லிஃப்ட்’ திரைப்படமும் இதில் அடங்கும்.
த்ரிஷாவுடன் ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் சைக்கலாஜிக்கல் ஹாரர் பாணியில் உருவாகிறது. பெண்களை மையமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. இயக்குநருடன் த்ரிஷா கிளாப் போர்டு வைத்திருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
