மும்பை: ஐசிசியின் முதலாவது மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 2027 பிப்ரவரி 14 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மும்பை மற்றும் வதோதரா நகரங்கள் இணைந்து தொடரை நடத்துகின்றன. மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மற்றும் வதோதரா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. 6 அணிகளும் ரவுண்ட்-ராபின் முறையில் தலா ஒரு முறை மோதும்.
புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.
முதலில் இந்த தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டில் நடைபெற்று வரும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பிற காரணங்களால் தொடர் இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தொடருக்கான முழு அட்டவணை மற்றும் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
