சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கம். சில நேரங்களில் இந்த அறிவிப்பு 2 முதல் 3 மாதங்கள் தாமதமாக வெளியாகும்.
விதிகளின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை கடந்தால் அது அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. கடந்த 2024 ஜனவரி 1-ம் தேதியே அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டிய போதிலும், அது அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படவில்லை.
இதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அமைச்சரவை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. எனினும், அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படாது என்று மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் வரை உயர்த்துவது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டால் சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் கிடைத்தால், கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நிலுவைத் தொகையுடன் கூடிய நிதிச் சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீத உயர்வுக்குப் பிறகு 63 சதவீதமாக உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
