புதுடெல்லி: குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முதல்முறையாக ‘புக் மை ஷோ’ செயலி மூலம் இலவச முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், ஒரு மணி நேரத்திற்குள் அனைத்து இடங்களும் நிரம்பின.
வதோதரா மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த டிஜிட்டல் முயற்சியில், அனைத்து இடங்களும் முன்பதிவு செய்யப்பட்ட பிறகும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ‘எம்-டிக்கெட்’ மற்றும் கியூஆர் குறியீடு வழங்கப்படும். டிஜிட்டல் முறையில் நுழைவுச் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டு, கூட்ட நெரிசலின்றி பார்வையாளர்கள் தங்களுக்கான இருக்கைகளுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வதோதராவுக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
மேற்கு பிரத்யேக சரக்கு ரயில் பாதையின் கீழ் ரூ.20,700 கோடிக்கும் அதிகமான செலவில் 326 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள சனந்த் (வடக்கு)-மகர்புரா, நியூ உம்பர்கான்-நியூ சஃபாலே மற்றும் நியூ சஃபாலே-ஜே.என்.பி.டி. ஆகிய மூன்று பிரிவுகளையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதன் மூலம் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துடன் நேரடி ரயில் இணைப்பு ஏற்பட்டு, தொழிற்பேட்டைகளுக்கான சரக்கு போக்குவரத்து மேலும் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புதிய சரக்கு ரயில் சேவைகள் மற்றும் வதோதரா-தாண்டா ரோடு இடையிலான புதிய பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதுதவிர, ரூ.9,700 கோடி மதிப்பிலான புதிய ரயில்வே திட்டங்கள், ரூ.1,780 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் ரூ.2,600 கோடி மதிப்பிலான குஜராத் மாநில அரசுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
