வாஷிங்டன்: ஈரானுடனான மோதலில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ஈரானுடனான போரில் அமெரிக்கா வெற்றி பெறும்போது மற்ற பொருட்களின் விலைகள் குறைவதைப் போலவே, குறிப்பாக கச்சா எண்ணெய் விலையும் மிக அதிகமாகக் குறையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கேலன் பெட்ரோலின் விலை 3 டாலராகவும், பின்னர் 2 டாலருக்கும் கீழ் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் மிக விரைவாக நடைபெறும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தீவிரமடைந்து வருகிறது.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான இந்த கடல் பாதையைச் சுற்றியுள்ள பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 97 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதமும், கடந்த ஒரு மாதத்தில் 19 சதவீதமும் உயர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், எதிர்காலத்தில் விலைகள் கடுமையாகக் குறையும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
