போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி என போலியாக நடித்து பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக 30 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்தி சிங் ராஜ்புத் என்ற பெண், தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும், சுற்றுலாத் துறையின் கூடுதல் இயக்குநர் என்றும் கூறி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ ஒன்றின் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
சிவப்பு நிற சேலை அணிந்த மூன்று பெண்கள் இடம்பெற்ற அந்த வீடியோவில், தாங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று கூறி நகைச்சுவையாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோ குறித்து போபால் போலீசார் விசாரணை நடத்தியதில், அது சட்டசபை வளாகத்தில் எடுக்கப்படவில்லை என்றும், வேறு ஒரு அருங்காட்சியக வளாகத்தில் படமாக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.
வீடியோவில் இடம்பெற்ற மற்ற இரு பெண்களிடம் விசாரணை நடத்தியபோது, திருப்தி சிங் ராஜ்புத் தங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போல நடிக்கச் சொன்னதாக தெரிவித்தனர்.
மேலும், தங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக்குவதாக கூறி அவர்களிடம் தலா ரூ.3 லட்சம் வரை பணம் பெற்றதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
சுற்றுலாத் துறை சொத்துகளை குத்தகைக்கு விடுவதாகவும், பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ஏராளமானோரிடம் பணம் மோசடி செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீட்டில் அதிரடி சோதனை
போபாலில் உள்ள திருப்தி சிங்கின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், பல்வேறு அரசுத் துறைகளின் போலி அடையாள அட்டைகள், லெட்டர் ஹெட்கள், பணி நியமன ஆணைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கின.
மேலும், இந்திய அரசு என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கார் மற்றும் போலி சி.பி.ஐ. அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருப்திக்கு உதவியாக இருந்த அவரது சகோதரர் சுதான்ஷு சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
