சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் ரூ.2.22 லட்சத்தை இழந்த நபருக்கு, புகார் அளித்த 2 மணி நேரத்திற்குள் முழு தொகையையும் மீட்டுத் தந்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துஷார் துடி பாராட்டினார்.
சோமலா பகுதியைச் சேர்ந்த ஒருவரின் செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதில், அவரது டிராக்டருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 54 எடுக்கப்பட்டிருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டார். மேலும், ‘1930’ என்ற சைபர் குற்ற உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்டவர் தாமதமின்றி புகார் அளித்ததால், சைபர் கிரைம் போலீசார் மோசடி கும்பலுடன் தொடர்புடைய வங்கி கணக்கை உடனடியாக முடக்கினர்.
இதன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.2.22 லட்சம் முழுமையாக மீட்கப்பட்டு, புகார் அளித்த 2 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
