வாஷிங்டன்: ஈரானுடனான மோதலில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுடனான போரில் அமெரிக்கா வெற்றி பெறும்போது மற்ற பொருட்களின் விலைகளைப் போலவே, குறிப்பாக கச்சா எண்ணெய் விலையும் வேகமாக குறையும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோல் விலை முதலில் 3 டாலராகவும், பின்னர் 2 டாலருக்கும் கீழ் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்றும் டிரம்ப் தனது பதிவில் உறுதியாக தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த கடல்வழிப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 97 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை சுமார் 9 சதவீதமும், கடந்த ஒரு மாதத்தில் 19 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரான் தொடர்பான மோதல் முடிவுக்கு வந்து அமெரிக்கா வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்படும் என டிரம்ப் தெரிவித்திருப்பது உலகளாவிய பொருளாதார வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
