புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்குகள் தீவிரமடைந்துள்ளன. இதனால் இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கடந்த சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலுக்குப் பிறகு மங்கலம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தொடர முடிவு செய்த அவர், தட்டாஞ்சாவடி தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தன் வேட்பாளராக களமிறங்க உள்ளார். இதனை முதல்-மந்திரி ரங்கசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனால் ஆளும் கூட்டணி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
மறுபுறம் கடந்த தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகம் மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் ஏற்கனவே தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கி மக்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழல் புதுச்சேரியிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. த.வெ.க. இந்த இடைத்தேர்தலில் நேரடியாக வேட்பாளரை நிறுத்துவதில் இதுவரை தீவிரம் காட்டவில்லை. இதனால் அக்கட்சியின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாகியுள்ளது.
கடந்த தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பின்னடைவை சந்தித்திருந்ததால், காங்கிரஸ் மீண்டும் நேரடியாக களம் இறங்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதற்கிடையே, நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகத்திற்கு த.வெ.க., காங்கிரஸ் மற்றும் சில கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதேநேரத்தில், தி.மு.க. தனித்துப் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க. சார்பில் டாக்டர் நித்தீஸ் தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்தன், நேயம் மக்கள் கழகம் சார்பில் விநாயகம் ஆகியோர் களப்பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தி.மு.க.வும் தேர்தல் களத்தில் இறங்கத் தயாராகி வருகிறது.
இதனால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் புதுச்சேரி அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன், ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சிகள் மற்றும் புதிய அரசியல் கூட்டணிகளின் பலத்தை சோதிக்கும் தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
