புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ரூ.10,021 கோடி மதிப்பில் 5 முக்கிய ரயில்வே பன்முகப் பாதை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் சுமார் 540 கிலோமீட்டர் ரயில் பாதை திறன் அதிகரிக்கப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
தமிழகத்திற்கு முக்கிய பாதைகள்
அரக்கோணம்–ரேணிகுண்டா இடையே 3 மற்றும் 4-வது ரயில் பாதை அமைத்தல், ஓசூர்–ஓமலூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைத்தல் மற்றும் சேலம்–கரூர்–திண்டுக்கல் இடையே இரட்டை ரயில் பாதை அமைத்தல் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன.
ஓசூர்–ஓமலூர் பாதை 147 கிலோமீட்டர் நீளத்திலும், சேலம்–கரூர்–திண்டுக்கல் பாதை 159 கிலோமீட்டர் நீளத்திலும் மேம்படுத்தப்பட உள்ளது.
52 லட்சம் மக்களுக்கு பயன்
இந்த திட்டங்கள் மூலம் சுமார் 2,121 கிராமங்களுக்கான ரயில் இணைப்பு மேம்படும் என்றும், சுமார் 52 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி சரக்கு ரயில் போக்குவரத்தும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலக்கரி, சிமெண்ட், இரும்பு, எஃகு, உணவு தானியங்கள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உரங்கள் உள்ளிட்ட சரக்குகளை கொண்டு செல்ல இந்தப் பாதைகள் முக்கிய பங்காற்றும்.
2029-30க்குள் நிறைவு இலக்கு
இந்தத் திட்டங்கள் ரயில் நெரிசலைக் குறைத்து, ஆண்டுக்கு கூடுதலாக 4.7 கோடி டன் சரக்குகளை கையாளும் திறனை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தப் பணிகளை 2029-30-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
