விருதுநகர்: குடும்பத் தகராறில் ஏற்பட்ட தாக்குதல் தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில், விருதுநகர் எம்.எல்.ஏ செல்வம் உள்பட 4 பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் பிரதிநிதிகள் மீதான சிறப்பு நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் முத்தால் நகரைச் சேர்ந்த வேல்முருகனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக குடும்பப் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் மனைவியின் சகோதரரான திவாகர் மற்றும் அவரது நண்பர்கள் தன்னை தாக்கியதாக வேல்முருகன் கடந்த 2016-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார்.
4 பேர் மீது வழக்கு
இதன் பேரில் விருதுநகர் கிழக்கு போலீஸார் திவாகர், செல்வம், பால மகேந்திரன் மற்றும் பால கர்ணன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான செல்வம் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷினி, விருதுநகர் எம்.எல்.ஏ செல்வம் உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நீண்ட காலமாக நடைபெற்று வந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
