புதுடெல்லி: அமெரிக்கர் உள்ளிட்ட 7 வெளிநாட்டினருக்கு எதிரான தீவிரவாத குற்றச்சாட்டுகள் கைவிடப்படவில்லை என்றும், அதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் என்ஐஏ சிறப்பு அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான் டைக், கொல்கத்தா விமான நிலையத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அதே நாளில் உக்ரைனைச் சேர்ந்த மேலும் 6 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 7 பேர் மீதும் டெல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
யுஏபிஏ பிரிவுகள் இடம்பெறவில்லை
தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தீவிரவாத தடுப்புச் சட்டமான யுஏபிஏ பிரிவுகள் இடம்பெறவில்லை.
இதையடுத்து, அந்தக் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்த என்ஐஏ சிறப்பு அரசு வழக்கறிஞர், யுஏபிஏ குற்றச்சாட்டுகள் கைவிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
விசாரணை தொடர்கிறது
இதுவரை நடைபெற்ற விசாரணையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அந்தப் பிரிவுகளின் கீழ் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யுஏபிஏ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
