சிவகங்கை: நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான ‘D56’ படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
‘லப்பர் பந்து’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ், பிரைமார்க் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றன.
படப்பூஜையை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டது. நடிகர் தனுஷை காணவும் படப்பூஜையில் பங்கேற்கவும் ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் கோவில் பகுதி திருவிழா போல் காட்சியளித்தது.
“அரசியல் தாக்கம் இல்லாத தனித்துவமான கதை” – வடிவேலு
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து நடிப்பது குறித்து பேசிய நடிகர் வடிவேலு, இந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நடைபெற்ற தொடக்க விழாவில் மக்களின் அன்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், படம் தனித்துவமான கதையைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். எபடத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் வடிவேலு தெரிவித்தார்.
“மண்ணின் கதையை அழகாக உருவாக்கியுள்ளார்” – எஸ்.ஜே.சூர்யா
நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், வழக்கமாக சென்னையில் நடைபெறும் படப்பூஜையை மாறுபட்ட முறையில் மாரநாட்டில் நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து சிறந்த எழுத்தாளர் என்றும், மண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையை அழகாக உருவாக்கியுள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
“சாப்பிட்டு பத்திரமாக வீடு திரும்புங்கள்” – தனுஷ்
ரசிகர்கள் மத்தியில் பேசிய தனுஷ், படப்பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், அங்கு நடைபெற்ற கிடா விருந்தில் அனைவரும் வயிறார சாப்பிட்டு பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விரைவில் ‘ஓம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரீத்தி முகுந்தன், ‘உறியடி’ விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தனுஷ்–தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
