புதுடெல்லி: ப்ரீபெய்டு மொபைல் பயனர்களுக்கு கூடுதல் தேர்வுகளை வழங்கும் வகையில், தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு விதிகளில் டிராய் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
2026-ம் ஆண்டுக்கான தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளின் 13-வது திருத்தத்தின் கீழ், டேட்டா சேவை தேவையில்லாத பயனர்களுக்காக குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் கொண்ட சிறப்பு கட்டண வவுச்சர்களை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது. இத்தகைய திட்டங்களுக்கு 30 நாட்கள் வரை செல்லுபடியாகும் காலம் இருக்கலாம்.
மேலும், மாதந்தோறும் ஒரே தேதியில் புதுப்பிக்கக்கூடிய வகையில் மாதாந்திர வவுச்சர்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக குறைந்த வருமானம் கொண்டவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் டேட்டா சேவை அதிகம் பயன்படுத்தாதவர்கள் தங்களுக்குத் தேவையான சேவையை மட்டும் குறைந்த கட்டணத்தில் தேர்வு செய்யும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 28 நாள் செல்லுபடியாகும் திட்டங்கள் காரணமாக ஒரு ஆண்டில் 12 மாதங்களுக்கு பதிலாக 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாக பயனர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.
எனினும், புதிய விதிமுறை அனைத்து 28 நாள் ரீசார்ஜ்களும் கட்டாயமாக 30 நாட்களாக மாற வேண்டும் என்று மட்டும் கூறுவதல்ல; குறிப்பிட்ட குரல்/எஸ்எம்எஸ் சிறப்பு வவுச்சர்களுக்கு 30 நாட்கள் வரை செல்லுபடியாகும் புதிய விருப்பங்களை வழங்குவதையே வலியுறுத்துகிறது.
