திருவனந்தபுரம்: கேரள அரசின் பொதுநிர்வாகத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதன் முகப்புப் பக்கத்தில் பாகிஸ்தான் கொடியும் பாகிஸ்தானுக்கு ஆதரவான வாசகங்களும் இடம்பெற்றிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ‘Team Blackleets’ என்ற பெயரில் ஒரு குழு தாங்களே இணையதளத்தை ஹேக் செய்ததாகக் கூறும் செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது. “பல இணையதளங்கள் தினமும் ஹேக் செய்யப்படுகின்றன; இன்று உங்கள் முறை” என்ற பொருளில் எச்சரிக்கை வாசகமும் பதிவிடப்பட்டிருந்தது.
சம்பவம் தெரியவந்ததும், இணையதளத்தை நிர்வகிக்கும் ஹோஸ்டிங் நிறுவனம் அந்த கணக்கை தற்காலிகமாக முடக்கியது.
இதற்கிடையே, இணையதளத்தின் முகப்புப் பக்கம் மட்டுமே பாதிக்கப்பட்டதா அல்லது சர்வர், தரவுத்தளம் உள்ளிட்ட முக்கிய தகவல்களுக்கும் அத்துமீறிய அணுகல் ஏற்பட்டதா என்பது குறித்து சைபர் பாதுகாப்புக் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அரசு தரவுகள் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை முடிந்த பின்னரே முழுமையான தகவல் தெரியவரும். பாதுகாப்பு ஆய்வுகள் முடிந்ததும் இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
