நடிகை ஜோதிகா, இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்க்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநராக களமிறங்கும் ஜேசன் சஞ்சய்
தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேத்ரின் தெரசா சிறப்புத் தோற்றத்தில் பாடல் ஒன்றில் இடம்பெற்றுள்ளார்.
நாளை திரைக்கு வரும் ‘சிக்மா’
ஆக்சன், நகைச்சுவை மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படக்குழுவினர் பல்வேறு நகரங்களில் தீவிரமாக புரமோஷன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜோதிகா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜேசன் சஞ்சய்யின் நேர்காணலை பார்த்தபோது அவர் பக்குவமான, அமைதியான, இயல்பான இளைஞராக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நீங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, உங்களுக்கு கிடைக்கவுள்ள வெற்றிக்கு தகுதியானவர் என தெரிகிறது. உங்களையும், உங்கள் பெற்றோரையும், ‘சிக்மா’ படக்குழுவினரையும் வாழ்த்துகிறேன். திரைப்பட வெளியீடு சிறப்பாக அமையட்டும். கடவுள் எப்போதும் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என ஜோதிகா தெரிவித்துள்ளார்.
ஜேசன் சஞ்சய்யின் முதல் படமே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜோதிகாவின் இந்த வாழ்த்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
