கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 25 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 5 குழந்தைகளும் அடங்குவர். சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது. செர்னிஹிவ் மாகாணத்தின் ப்ரிலுகி நகரில் குடியிருப்பு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் மட்டும் 19 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீவ் உள்ளிட்ட பல நகரங்களிலும் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள கூடுதல் Patriot வான் பாதுகாப்பு அமைப்புகள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடியாக ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் உள்ளிட்ட இலக்குகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
