தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான வத்சலா ராஜகோபால் தனது 93-வது வயதில் சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் தனது 60 வயதில் திரையுலகில் அறிமுகமானவர் வத்சலா ராஜகோபால். வயது ஒரு தடையல்ல என்பதைத் தனது திரைப்பயணத்தின் மூலம் நிரூபித்தவர். திருவனந்தபுரத்தில் பிறந்த அவர் சிறுவயதிலிருந்தே நடனம் மற்றும் நாடகங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். திருமணத்திற்குப் பின்னர் 1953ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர், கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றினார்.
அந்த அலுவலகத்தில்தான் பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநரான கே.பாலச்சந்தர் மூத்த அதிகாரியாகப் பணியாற்றியதாகவும் அவர் தனது பழைய பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார்.
நாடகத் துறையில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்த அவர், ரசிக்க ரங்கா என்ற நாடகக் குழுவில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார். அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து இயக்குநர் மணிரத்னம் ரோஜா படத்தில் வாய்ப்பு வழங்கினார்.
அந்தப் படத்தில் மதுபாலாவின் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். பின்னர் தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
சதி லீலாவதி படத்தில் அம்புஜம் மாமி கதாபாத்திரம், அந்நியன், மொழி, ரிதம், வின்னர், பட்டியல், தாம் தூம், கல்யாண சமையல் சாதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தொலைக்காட்சித் தொடர்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சித்தி, ஆனந்தம், முந்தானை முடிச்சு, வசந்தம் உள்ளிட்ட தொடர்களில் அவரது நடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
பாலுமகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சித் தொடரிலும் அவர் பங்கேற்றுள்ளார். திரைப்படங்களில் பெரும்பாலும் பாட்டி கதாபாத்திரங்களில் தோன்றினாலும், நகைச்சுவை, உணர்ச்சி, குடும்பப் பாசம் ஆகியவற்றை இயல்பாக வெளிப்படுத்தும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 60 வயதில் தொடங்கிய அவரது திரைப்பயணம் பல தலைமுறை ரசிகர்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.
