சென்னை: மத்திய – மாநில உறவுகள் தொடர்பாக ஆய்வு செய்து வந்த குரியன் ஜோசப் தலைமையிலான குழுவைக் கலைத்த தமிழக அரசின் முடிவு அரசியல் கட்சிகளிடையே புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் தவெக அரசின் முடிவுக்கு எதிராக திமுக மட்டுமின்றி சில கூட்டணிக் கட்சிகளும் குரல் எழுப்பியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
குழுவைக் கலைப்பது மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. குழுவின் முதல் அறிக்கை ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் முழுமையடையும் முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திமுக தலைவர்கள் இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கும் செயல் என்று விமர்சித்துள்ளனர். மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு குறிப்பிட்ட ஆட்சியின் பொறுப்பு மட்டுமல்ல; தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டிய அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த கடமை என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு மாறாக, மாநில சட்ட ஆணையத்தின் மூலம் இதே பணிகளை விரிவாக மேற்கொள்ள முடியும் என்பதால் குழுவைக் கலைத்தது சரியான முடிவு என்று பாஜக தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே விவகாரத்தில் ஆளும் தரப்புக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
