நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்ட முன்மொழிவுகளை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தேசிய அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா மக்களவையில் தேவையான ஆதரவைப் பெறத் தவறியிருந்தது. அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை மசோதாவும் அப்போது முன்னெடுக்கப்படவில்லை.
மகளிர் இடஒதுக்கீட்டுடன் தொகுதி மறுவரையறை இணைக்கப்படுவது தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்குமா என்ற கவலையும் எழுந்துள்ளது. குறிப்பாக மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்ட தொகுதி மறுவரையறை குறித்து தென் மாநிலக் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி ஆலோசித்த பிறகே இத்தகைய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.
