அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சர்வதேச வர்த்தகத்தில் புதிய வரி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. தொழிற்சாலை உற்பத்தித் திறன் அதிகரிப்பால் அமெரிக்கச் சந்தையில் அதிகப்படியான பொருட்கள் குவிக்கப்படுவதாகக் கூறி, 16 முக்கிய வர்த்தக நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை விதிப்பதற்கான ஆய்வை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301ன் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகளை வெளியிட்டு, அதனடிப்படையில் புதிய வரிகளை முன்மொழியத் திட்டமிடப்பட்டுள்ளது. சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, வியட்நாம், தைவான், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் இந்த ஆய்வின் வரம்பில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவுக்குள் அதிகப்படியான தொழிற்சாலைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் வாதிடுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சீனா உள்ளிட்ட நாடுகள் ஏற்கவில்லை. புதிய வரிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வர்த்தக ஒப்பந்தங்களுடன் எவ்வாறு இணைக்கப்படும் என்பதும் முக்கியமான கேள்வியாக உள்ளது.
புதிய வரி விகிதங்கள் குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகாத நிலையில், சில வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வரி உச்சவரம்புகளை மதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவும் இந்த விசாரணை வரம்பில் இடம்பெற்றிருப்பதால், புதிய வர்த்தக வரி நடவடிக்கைகள் இந்திய ஏற்றுமதித் துறைக்கும் அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளுக்கும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
