சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் நிறுவ காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள், இந்து அமைப்புகள், வீடுகள், தெருக்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். அதன் பிறகு, சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு சென்னையில் மட்டும் இந்து முன்னணி சார்பில் 5,501 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதற்காக இந்து அமைப்புகள் காவல்துறையிடம் அனுமதி கோரி வருகின்றன. இதற்கு முன் அனுமதி இல்லாத புதிய இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளை மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் திட்டமிடுமாறு போலீசாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வகுக்குமாறு அனைத்து நகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, ரசாயன கலவை இல்லாமல் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். மேடையில் விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. பிற மத ஸ்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகளை வைக்கக் கூடாது. மதவெறியைத் தூண்டும் அல்லது பிற மதத்தினரின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலான முழக்கங்களை எழுப்புவதை எந்தச் சூழ்நிலையிலும் அனுமதிக்கக் கூடாது.
விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்கள், ஊர்வலம் நடக்கும் இடங்கள், கரைக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மினி லாரிகள் மற்றும் டிராக்டர்களில் மட்டுமே சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். மாட்டு வண்டி அல்லது 3 சக்கர வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டாம். ஒலிபெருக்கி பொருத்துவதற்கு காவல் கண்காணிப்பாளரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது என்பதை மின் வாரியத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். பொது இடங்களில் சிலைகள் வைக்க உள்ளாட்சி அமைப்பு அனுமதி பெற வேண்டும்.
மேலும், பயங்கரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் காரணமாக, காவல் துறை அதிகாரிகள் வழக்கமாக அளிக்கும் பாதுகாப்பை விட, கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
கடந்த காலங்களில் சிலைகள் வைக்கப்பட்ட இடத்தில் மட்டுமே சிலைகளை வைக்க அனுமதிக்க வேண்டும். புதிய மற்றும் அசாதாரண இடங்களில் சிலைகளை அனுமதிக்கக்கூடாது. முறையான அனுமதியின்றி பேனர்கள், கொடிகள் வைப்பதை தடை செய்ய வேண்டும். சிலைகளை கரைக்கும் முன், சிலைகளில் அணிந்திருக்கும் துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், பூஜை பொருட்கள் ஆகியவற்றை முழுமையாக அகற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.