சென்னை: பொதுமக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை ”கிருஷ்ண ஜெயந்தி” என்றும்; ”கோகுலாஷ்டமி” என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும், எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
”நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்குப் பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை; என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்” என்று கண்ணபிரான் பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறிமுறையினை உலகுக்கு எடுத்துரைத்தார். ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றியும், தீமைகளை முறியடிக்கவும் உறுதியேற்க வேண்டும். அறம் பிறழ்கின்ற போது, நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, நம் கடன் அறத்தை வளர்ப்பதே என்ற உயரிய குறிக்கோளுடன் ஒன்றிணைந்து அனைவரும் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.