புதுடில்லி: இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற, தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகருக்கு சிறப்பு கோர்ட் ஜாமீன் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.ம.மு.க பொதுச் செயலர் தினகரன், அ.தி.மு.க,வின் நிரந்தர சின்னமான ‘இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக 2017 ல் கைது செய்யப்பட்டு. திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் பெற்றார்.
இந்த விவகாரத்தில், பல்வேறு வழக்குகளில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தில், ‛தினகரன் தனக்கு ரூ.2 கோடி முன்பணமாக கொடுத்ததாக’ கூறியுள்ளார். இதனை அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டில்லி சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் ஜாமின் கோரிய சுகேஷ் சந்திரசேகர் மனுவை இன்று விசாரித்த நீதிபதி விஷால் கோனே, ரூ. 5 லட்சம் தனிநபர் பிணையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். எனினும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கில் ஜாமின் கிடைத்தும், சுகேஷ் சந்திரசேகர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.