தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு ஒரு போக சம்பா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பயன்பெற உயர் விளைச்சல் நெல் இரகங்களை சாகுபடி செய்ய வேளாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் இதற்கான நெல் ரகங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்டத்தில் ஒரு போக சம்பா சாகுபடிக்கு விதைப்பு செய்ய ஏற்ற நீண்டகால இரகங்களை தேர்வு செய்து ஆகஸ்ட் மாதத்திற்குள் நாற்று விட விவசாயிகள் முன்வரவேண்டும்.
ஆடுதுறை 51 நெல் ரகம்: 155 முதல் 160 நாட்கள் வயதுடைய இந்த ரகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னியுடன் பிபிடி 5204 இரகத்தில் இன சேர்க்கை செய்யப்பட்டது. இது எக்டேருக்கு 6587 கிலோ மகசூல் கொடுக்கக் கூடிய மத்திய சன்ன நெல்மணிகளை உடையது.
சி.ஆர்.1009 சப்1: இந்த ரகம் 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது. சி.ஆர்.1009 இரகத்துடன் 13A (MAB) என்கிற இரகத்துடன் இன சேர்க்கை செய்யப்பட்டு எக்டேருக்கு 5759 கிலோ மகசூல் கொடுக்கக் கூடிய குறுகிய பருத்த நெல்மணிகளை உடையது. இதன் 1000 நெல்மணிகளின் எடை 23 கிராம். அதிக அறவைத் திறனும் முழு அரிசி காணும் திறனுடன் அதிக மாவு சத்து உள்ளது. பள்ளக்கால் பகுதிகளுக்கு எற்ற இந்த ரகம் வளர்ச்சி பருவத்தில் 15 நாட்கள்வரை வெள்ளத்தை தாங்கி வளரக் கூடியது. நேரடி விதைப்புக்கும் ஏற்ற இந்த இரகம் புகையானுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. இலைப்புள்ளி, குலை நோய்க்கு ஓரளவிற்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.
சி.ஆர்.1009: இந்த இரகம் சாவித்திரி அல்லது பொன்மணி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறது. 155 நாட்கள் வயதுடைய இந்த ரகம் பங்கஜ் மற்றும் ஜெகநாத் இரகங்களை இன சேர்க்கை செய்தது. 1982 ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ரகம் எக்டேருக்கு 5300 கிலோ மகசூல் கொடுக்கும் திறன் கொண்டது. 1000 நெல் மணிகளின் எடை 23.5 கிராம். நீண்ட கதிர்களையும் குறுகிய பருத்த நெல்மணிகளையும் நெருக்கமாக கொண்ட இரகம். புகையானுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட இரகமாகும்.