கலிபோர்னியா: ஹிந்துக்களே திரும்பி போங்கள்… நியூயார்க் சுவாமி நாராயண் கோவிலை விஷமிகள் சேதப்படுத்தி 10 நாட்கள் ஆன நிலையில், கலிபோர்னியாவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த விஷமிகள், ‘ஹிந்துகளே திரும்பி போங்கள்’ என வாசகத்தை எழுதி வைத்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பி.ஏ.பி.எஸ். எனப்படும் போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் என்ற அமைப்பு கட்டியுள்ள சுவாமி நாராயண் கோவில் மெல்வெல்லியில் உள்ளது. கடந்த 17 ம் தேதி இக்கோவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள பி.ஏ.பி.எஸ்., சுவாமி நாராயண் கோவிலுக்குள் இரவு அத்துமீறி நுழைந்த விஷமிகள், ‘ஹிந்துகளே திரும்பி போங்கள்’ என்ற வாசகத்தை எழுதி வைத்ததுடன், அங்கிருந்த குடிநீர் குழாயையும் சேதப்படுத்தி உள்ளனர். இதற்கு பி.ஏ.பி.எஸ்., அமைப்பு அதிருப்தி தெரிவித்து உள்ளது. வெறுப்புக்கு எதிராக, ஒற்றுமையாக இருந்து அமைதிக்காக பிரார்த்தனை செய்வதாக அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எம்.பி., அமி பெரா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதபாகுபாட்டுக்கும், வெறுப்புக்கும் இடமில்லை. இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். நம்பிக்கை, மரியாதைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் எனக்கூறியுள்ளார்.