சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த மின்னாம்பள்ளியில், நைனாமலை வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. 2700 அடி உயரத்தில் உள்ள இக்கோயிலுக்கு பெருமாள் பக்தர்கள் 3600 படிகள் ஏறிச் செல்கின்றனர்.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு உற்சவ விழா துவங்கியது. வெள்ளிக்கிழமை மாலை முதல் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மலையேறி வரதராஜப் பெருமாளை வழிபட்டனர்.
நாமக்கல், சேலம், ராசிபுரத்தில் இருந்து பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மலை ஏற முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடிவாரத்தில் உள்ள பாத மண்டபத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
புரட்டாசி 2-வது சனிக்கிழமை என்பதால் வரதராஜப் பெருமாளுக்கும், ஆஞ்சநேயருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பிறகு, வெள்ளிக் கவசங்கள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நைனாமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மலையேறி சாமி தரிசனம் செய்தனர். இதை முன்னிட்டு சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அருவாபலியில் உப்பு போட வேண்டாம் என பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.