சென்னை: திருமணத் தடையா வாங்க திருவேதிக்குடி வேதபுரீசுவரர் கோயிலுக்கு என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் அழைக்கும் ஸ்தலமாக அமைந்துள்ளது.
சரிங்க இந்த கோயில் எங்கே இருக்கு. தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த திருவேதிக்குடி வேதபுரீசுவரர் கோயில். இறைவன் வேதபுரீசுவரர். இறைவி மங்கையர்கரசி.
இக்கோயிலில் நுழைந்ததும் இடது புறம் கணபதி அமர்ந்துள்ளார். இவரை வேத விநாயகர், வேதம் கேட்ட விநாயகர் என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். காரணம் சிரசை ஒரு புறமாகச் சாய்த்து காதை சற்று உயர்த்தி வேதம் கேட்கும் பாவனையில் கணபதி அமர்ந்துள்ளார். வேதங்கள் வழிபட்ட தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்போதும் வேதியர்கள் வேதம் ஓதிக் கொண்டிருந்த இடம். வேத நாயகரான பிரம்மன் வழிபட்ட தலம். வேதபுரீசுவரர் ஆக வேதத்தின் பொருளாக சிவபெருமான் விளங்குகிறார் என்றால் வேதத்தின் சொல்லாகவும், அதன் இனிமையாகவும் மங்கையர்கரசி அம்மன் உள்ளார். கல்வெட்டுக்கள் இத்தல இறைவனை திருவேதிக்குடி மகாதேவர் என்றும், பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் எனவும் குறிப்பிடுகின்றன. திருநாவுக்கரசு சுவாமிகள் ‘ஐயனை ஆராவமுதினை நாமடைந்து ஆடுதுமே’ எனப் பாடுகிறார்.
இறைவன் சுயம்பு மூர்த்தி வாழை மடுவில் சுயம்புவாகத் தோன்றியதால் வாழை மடுநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்தத் திருக்கோயில் பிரகாரத்தைச் சுற்றி 108 சிவலிங்கங்கள் வரிசையாக அமைந்துள்ளன. இந்தத் தலத்தை ஒரு முறை வலம் வந்து தரிசனம் செய்தால் 108 சிவாலயங்களை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
சூரியன் வழிபட்ட தலம். இப்போதும், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 13 – 15 ஆம் தேதிகளில் சூரிய பகவான் தன் பொற் கிரணங்களால் வேதபுரீசுவரரை அர்ச்சிப்பதை காணலாம். மேலும், செல்வங்களுக்கு அதிபதியான குபேரனும் இத்தல இறைவனை வழிபட்டு வரம் பெற்றுள்ளார். நந்தியெம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் ஒரு பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் கூடிய சுப நாளில் திருமழப்பாடியில் திருமணம் நடத்த முடிவு செய்கிறார் அய்யாரப்பர்.
அதற்காகச் சுற்றியுள்ள ஏழு ஊர்களில் இருந்து பொருள்களைச் சேகரிக்கிறார். திருமணத்துக்குத் தேவையான பழங்கள் கொடுத்த ஊர் திருப்பழனம். விருந்துக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் கொடுத்த ஊர் திருச்சோற்றுத்துறை. கண்டாபரணங்கள் வழங்கிய ஊர் திருக்கண்டியூர். மலர்களும், மாலைகளும் வழங்கிய ஊர் திருப்பூந்துருத்தி. ஹோமங்களுக்கு தேவையான நெய்யை வழங்கிய ஊர் திருநெய்தானம். திருமணச் சடங்குகளுக்குத் தேவையான வேதம் அறிந்த வேதியர்கள் திருவேதிக்குடியிலிருந்துதான் சென்றனர்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அய்யாரப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் சித்திரை மாதத்தில் புது மணமக்களான நந்தியெம்பெருமான் சுயசாம்பிகை தலத்துக்கு அழைத்து வந்து நன்றி தெரிவிக்கிறார். இது ஏழூர் வலம் என்ற சப்தஸ்தான திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நந்தியெம்பெருமானுக்கே திருமணம் நடத்தி வைக்க காரணமாக இருந்த தலம் என்பதால் இது திருமணத் தடை நீக்கும் தலமாக இருக்கிறது. நம்பிக்கையுடன் திருவேதிக்குடி வந்து வேதபுரீசுவரரையும், மங்கையர்க்கரசியையும் வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை நீங்குகிறது. இத்தலத்திற்கு வந்து வழிபட்ட பின்னர் வீட்டுக்குச் சென்று இத்தலத்தில் சம்பந்தர் பாடிய பதிகத்தில் உள்ள உன்னி இரு போதும் எனத் தொடங்கும் பாடலை 48 நாட்களுக்குத் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைக்கூடி வரும். இது திருமணத் தடை நீங்கிய நூற்றுக்கணக்கானவர்களின் அனுபவம். திருமணம் நடந்த பிறகு கணவன், மனைவி இருவருமாக வந்து பிரார்த்தனையை நிறைவு செய்யலாம்.
ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள் தங்களது குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு கணவன்- மனைவி விரிசல் இருந்தாலும், ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டிருந்தாலும் இங்கு வந்து வழிபட மனக் கசப்பு நீங்கி ஒற்றுமை பிறக்கும். நல்ல திருமணத்தை விரும்புகிறவர் இங்கு வந்து திருமண மங்கலச் சடங்குகளைச் செய்தால் பதினாறு பேறுகளும் பெற்று நிறைவாழ்வு வாழலாம். எனவே திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட தடங்கல்கள் நீங்கி திருமணம் சிறப்பாக நடக்கும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.