சென்னை: முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும் உணவு. அதை ஒரே மாதிரி சமைக்காமல் பலவிதங்களிலும் செய்து கொடுத்தால் குடும்பத்தினர் நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிடுவார்கள் அல்லவா. அந்த வகையில் முட்டை ஆம்லேட் புளிக்கொழம்பு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க.
தேவையான பொருட்கள்:
முட்டை-4, எண்ணெய் -தேவையான அளவு, வெங்காயம் -2, தக்காளி, பச்சை மிளகாய், புளி -எலுமிச்சை அளவு, மஞ்சத்தூள்-அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்-2 ஸ்பூன், கொத்தமல்லித்தூள் -அரை ஸ்பூன், சோம்பு-அரை ஸ்பூன், தேங்காய்-சிறிதளவு, உப்பு.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் பொடியாக அரிந்து கொள்ளவும். மிளகாய், சீரகம், மிளகை நைசாக அரைத்தும், புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். சோம்பு, தேங்காயை சேர்த்து தனியாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் முட்டை, உப்பு, மற்றும் அரைத்த (மிளகாய், சீரகம், மிளகு)பொடியைப் போட்டு நன்கு அடித்து வைக்கவும். பின் தோசைக் கல்லில் எண்ணையை ஊற்றி பொடியாக நறுக்கி வெங்காயத்தைப் போட்டு வதக்கி சிவந்ததும், அடித்து வைத்த முட்டையை ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு ஆம்லெட் செய்யவும்.
பின்பு முட்டை ஆம்லெட்டை நான்கு அல்லது ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிய பின் புளிச் சாறுடன், மஞ்சத்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது [தேங்காய் + சீரகம்] சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.