சென்னை: கால்கள் வீக்கம் அடைவதன் காரணம் என்ன? ஒரே இடத்தில் தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், அல்லது கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தால், கால்களிலுள்ள ரத்தக்குழாய்களில் அழுத்தம் அதிகமாகிறது.
இதனால் ரத்தக் குழாய்களிலிருந்து, நீர் வெளியே வந்து, சுற்றியிருக்கும் திசுக்களில் கொஞ்சம் கொஞ்சமாக சேருகிறது. இப்படித்தான் கால் வீக்கம் ஏற்படுகிறது. அதிக உடல் எடை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பது அல்லது அமர்ந்திருப்பது, இறுக்கமான காலுறைகள், ஜீன்ஸ் பேண்ட் நீண்ட நேரம் அணிந்திருப்பதாலும் காலில் நீர் சேரலாம்.
இதுதவிர சிறுநீரகம், இதயத் தசைகள் பாதிப்பு, புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் பக்க விளைவு, காலிலுள்ள ரத்தக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு ரத்தம் வந்து சேருவதில் பிரச்சினை, ஹார்மோன் பிரச்சனை, நிணநீர் மண்டல பாதிப்பு, சிறுநீரக வடிகுழாய்களில் பிரச்சினை, கர்ப்ப காலம், நுரையீரல் ரத்தக் குழாய்களில் அதிக ரத்த அழுத்தம், கால்களிலுள்ள ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டி அடைப்பது, அதிக உப்புள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, காலில் ஏதாவது புண், மூட்டு வீக்கம் இருப்பது, சோடா, குளிர்பானங்கள் அடிக்கடி அதிகமாகக் குடிப்பது போன்ற பல காரணங்களினால் கால்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு.
பயணத்தின் போது காலில் வீக்கம் வராதிருக்க, அதிக உப்பு சேர்த்த உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். காலை நன்றாக, இறுக்கமாக அழுத்தக்கூடிய காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள். கால்களை ஒரே நிலையில் தொங்கப் போட்டுக் கொண்டு வரக்கூடாது.
நிறைய காய்கறிகள், பழங்கள், தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோடா, சிப்ஸ், குளிர்பானங்களை தவிர்க்கவும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கால்களை தூக்கி தலையணை மீதோ அல்லது மேஜை மீதோ வைத்துக் கொள்ளவும். ஏதாவது ஒரு வழியில் கால்களை ஆட்டிக் கொண்டே இருங்கள்.