பாங்காக்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்நிலையில், தாய்லாந்தின் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை, அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என நீர்யானை கணித்துள்ளது. மூ டெங் என்ற பெயருடைய கவனத்தை ஈர்க்கும் நீர்யானையின் முன் பூங்கா பராமரிப்பாளர்கள் இரண்டு தர்பூசணிகளை வைத்தனர். ஒன்றில் டிரம்பின் பெயரும் மற்றொன்றில் கமலா ஹாரிஸின் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. நீர்யானை குட்டி நேராக டிரம்பின் பெயர் பதித்த தர்பூசணிக்கு சென்று சாப்பிட்டது. அருகில் இருந்த மற்றொரு பெரிய நீர் யானை கமலா ஹாரிஸ் என்ற தர்பூசணியை தின்றது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவார் என மூ டெங் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. அதேபோல், ஸ்விங் மாநிலங்களில் கருத்துக்கணிப்புகளும் டிரம்பிற்கு சாதகமாக உள்ளன. இந்நிலையில் இந்த ‘ஹிப்போ ஜோசியம்‘ வீடியோ கவனம் பெற்றுள்ளது.
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். திங்கட்கிழமை நிலவரப்படி, 70,800,000 அமெரிக்கர்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். அந்த நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எந்த நேரத்திலும் வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்தவுடன் அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அனேகமாக அன்றைய தினம் இரவு புதிய ஜனாதிபதி உறுதி செய்யப்படுவார். இழுவை தொடர்ந்தால், இரண்டு நாட்களுக்குப் பிறகு முடிவுகள் தெரியும். எனினும், அமெரிக்க அதிபர் யார் என்பது ஜனவரி 6-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ளது.