கேரளா: நாங்களும் பறிமுதல் செய்வோம்… தமிழகத்தில் இயக்கப்படும் கேரள ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்தால், கேரளாவுக்கு வரும் தமிழக ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்வோம்’ என, அம்மாநில போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
தமிழத்தில் பிற மாநில பதிவு எண் உடைய ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என, போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும், விதிகளை மீறி இயங்கும் வெளிமாநில பதிவெண் உடைய ஆம்னி பஸ்கள் மீது, நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தது.இந்த சூழ்நிலையில், வெளிமாநில பதிவெண் உடைய ஆம்னி பஸ்கள், தமிழகத்தில் இயங்குவதற்கு தடை விதிக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில், கேரள ஆம்னி பஸ்களுக்கு தமிழகத்தில் வரி அதிகரிக்கப்பட்டு உள்ளதாக, கேரளா அரசு புகார் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த நவ., 1 முதல், இருக்கைக்கு 4,000 ரூபாய் வீதம் காலாண்டு வரி கேரளா பஸ்களுக்கு உயர்த்தப்பட்டது குறித்து, அம்மாநில சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது, அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பேசியுள்ளதாவது:
நம்மிடம் ஆலோசிக்காமல் தமிழக அரசு தொகையை ஒரே கட்டமாக, 4,000 ரூபாய் அதிகரித்துள்ளது. தமிழக அதிகாரிகளிடம் பேசியும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியானால் இருக்கட்டும், நாமும், 4,000 ரூபாய் அதிகரிக்கலாம்; சபரிமலை சீசன் வர உள்ளது. தமிழகத்தில் இருந்து தான் அதிகமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். நாங்கள் எங்கள் கஜானாவில் பணத்தை நிறைப்போம்.
இங்கிருந்து செல்பவர்களை அங்கு தொந்தரவு செய்தால், அங்கிருந்து வருபவர்களை நாங்கள் இங்கு தொந்தரவு செய்வோம். கேரள பஸ்களை அவர்கள் பறிமுதல் செய்தால், தமிழக பஸ்களை நாங்கள் இங்கு பறிமுதல் செய்வோம். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.