திருவள்ளூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழையால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 முக்கிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் செல்கிறது.
இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு வினாடிக்கு 381 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 130 கன அடியும், பூண்டி ஏரிக்கு 100 கன அடியும், சோழவரம் ஏரிக்கு 35 கன அடியும் வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 170 கன அடி கிருஷ்ணா நீரும், பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 315 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
இதனால், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,415 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,706 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அதேபோல், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் ஆதாரம் 487 மில்லியன் கன அடியாகவும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரி 90 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.