சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்றும், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவித்தார். முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தற்போது வடகிழக்கு, தெற்கு ஆந்திராவில் உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட கடலோர, தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 15-ம் தேதி தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போதைய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை. மேற்கு திசையில் நகர்ந்து, மெதுவாக கரையை கடக்கும். சென்னை மக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்போதைய மழை தொடரும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.