மதுரை: பாதாள அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்காத மத்திய அரசு, அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி அளிக்கிறது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள பதிவில், “அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுச் சின்னம் அருகே 2015.51 ஹெக்டேரில் டங்ஸ்டன் சுரங்கத்தை வேதாந்தா நிறுவனம் அமைக்கிறது.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியமான கனிமங்களின் 4-வது ஏலத்தில், இந்துஸ்தான் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிம தொகுதிக்கு நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு காரணமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நடத்தி வந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி, மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 2015.51 ஹெக்டேர் பரப்பளவில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்டது.
தமிழகத்தின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்றான அழகர் மலை, சுரங்கத் தொகுதியின் எல்லையில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுரங்க வளாகத்தை ஒட்டி பெருமாள் மலை அமைந்துள்ளது. பெருங்கற்காலக் கட்டமைப்புகள், 2200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்க் கல்வெட்டுகள், சமணர் குளங்கள், சங்க காலப் பாண்டியர்கள் வழங்கிய கற்படுகைகள், குடைக் கோயில்கள் என தமிழக வரலாற்றின் தனிச் சின்னங்களைத் தாங்கி நிற்கும் இடம்.
அரிட்டாபட்டி குளங்கள், நீர்த்தேக்கங்கள், நீரூற்றுகள், அணைகள், பறவைகள் மற்றும் விலங்குகள் கொண்ட தொல்தமிழரின் வரலாற்று மற்றும் உயிர் வளம் நிறைந்த பகுதியாகும். அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளம் ஏழு சிறிய குன்றுகளை கொண்டுள்ளது. இந்த மலைகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இதில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன.
இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டது. மேலும், வெள்ளைக் வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற இனங்களும் இப்பகுதியில் வாழ்கின்றன. பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான தளமாகப் பட்டியலிட்டு ஏலப் பட்டியலில் வைப்பது தவறு.
பாதாள அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்காத மத்திய அரசு, அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி அளிக்கிறது. கலாச்சார தடயங்களை அழிக்கும் வகையில், வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு, அரிட்டாபட்டி உள்ளிட்ட 15 ஹெக்டேர் பரப்பளவு, 2015-ல் வழங்கப்பட்டது. இந்த ஏலத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு சுரங்க அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி போன்றவற்றை தமிழக அரசு வழங்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்.