சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை மேற்கொள்வதற்காக கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, படிப்பை முடித்துக்கொண்டு நவம்பர் 28-ம் தேதி சென்னை திரும்புகிறார். அப்போது அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
தொடர்ந்து, நவ., 29-ல், சென்னை, கமலாலயத்தில், கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். கோவையில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1. கொடிசியா வளாகத்தில் உள்ள, ‘இ’ அரங்கில், ‘வாய்ஸ் ஆஃப் கோவை‘ அமைப்பு சார்பில், நடக்கும், ‘ஏ3 கான்க்ளேவ்’ கருத்துரு நிகழ்ச்சியில், அண்ணாமலை பங்கேற்கிறார்.
லண்டனில் இருந்து திரும்பிய அண்ணாமலை பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது. சுவாமி விவேகானந்தரின் ‘விழித்திரு, விழிப்புடன் இரு, உறுதியுடன் இரு’ என்ற மூன்று தலைப்புகளில் கவனம் செலுத்தும் இம்மாநாட்டில், முதல் நாள் சனாதன தர்மம் குறித்தும், இரண்டாம் நாள் அரசியல் நிலவரம் குறித்தும் பங்கேற்கும் தலைவர்களின் உரைகள் இடம்பெறும்.
அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜா, அர்ஜூன மூர்த்தி, அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 27 பேர் பேசுகின்றனர். உறுப்பினர் சேர்க்கை, அமைப்புத் தேர்தல் உள்ளிட்ட கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை தொடர்ந்து கவனம் செலுத்துவார். பா.ஜ., அமைப்பு தேர்தல் முடிந்ததும், 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டது போல், சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும், ஜனவரிக்கு பின், அனைத்து கிராமங்களிலும், பேரணி நடத்த, அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் சுற்றுப்பயணம் செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்தும், மனுக்களை பெறுவார்.
பின்னர், முக்கிய துறைகள் வாரியாக பொதுக்குழுக்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில் திமுகவை தோற்கடிக்க புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரிக்கு பிறகு இது தொடர்பாக அண்ணாமலையின் செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும் என்றும் பாஜகவினர் கூறுகின்றனர். 2026 சட்டசபை தேர்தல் பா.ஜ., – தி.மு.க.,வுக்கு இடையே போட்டியாக இருக்கும் என, நிர்வாகிகள் கூறுவதால், அதை முறியடிக்க, அண்ணாமலை, முழுமையான அதிரடி திட்டத்தை வகுத்து வருகிறார்.
அதன்படி, 2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது என்பதில் அண்ணாமலை உறுதியாக உள்ளார்.