புதுடெல்லி: இந்திரா காந்தி பெண்களுக்கான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா, முதல்வர் அதிஷி உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பேசிய வி.கே.சக்சேனா, டெல்லி முதல்வராக பெண் ஒருவர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதுமட்டுமின்றி, அவருக்கு முன் இருந்த முதல்வரை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்றும் தன்னம்பிக்கையுடன் கூறுவேன். பெண்களின் முன்னேற்றத்திற்கு நான்கு வழிகாட்டும் நட்சத்திரங்கள் உள்ளன. முதலில், நீங்களே பொறுப்பேற்க வேண்டும். இரண்டாவதாக, உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்திற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். மூன்றாவதாக, சமுதாயத்தையும் தேசத்தையும் கட்டியெழுப்புவதற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்.
நான்காவதாக, நீங்கள் பாலினத்தின் கண்ணாடி உச்சவரம்பைத் தகர்த்து, எல்லாத் துறைகளிலும் மற்றவர்களுக்கு இணையாக நிற்கும் பெண்களாக உங்களை நிரூபிக்க வேண்டும்.” கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக இருந்தபோது அவருக்கும் டெல்லி ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவால், செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளிவந்த பிறகு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் மக்கள் தீர்ப்பை எடுப்பேன் என அறிவித்தார். இதையடுத்து அதிஷி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.