நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை நடக்கிறது.இதில் சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா உட்பட மொத்தம் 15 மசோதாக்கள் மீது விவாதம் அல்லது நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் 5 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களில் குரல் எழுப்பக்கூடும் என்பதால் இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, எல்.முருகன், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.