திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு தொடர்பான ஏற்பாடுகள் குறித்து, கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சவுத்ரி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வெங்கையா சவுத்ரி பேசுகையில், வைகுண்ட வேல் எனப்படும் சொர்க்கவாசல் 2025 ஜனவரி 10 முதல் 19 வரை திறக்கப்பட்டு 10 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்றார்.
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த 10 நாட்களில், சிபாரிசு கடிதங்களுக்கான விஐபி தரிசனம், கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவம் மற்றும் என்ஆர்ஐகளுக்கான சிறப்பு தரிசனமும் ரத்து செய்யப்படும். ஜனவரி 9-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த 23-ம் தேதி மதியம் 2 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான உண்டியல் அருகே வைக்கப்பட்டிருந்த மற்றொரு உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி கொண்டிருந்தனர். அப்போது, ஒருவர் மட்டும், கையில் இருந்த உண்டியலைப் பிடித்துக்கொண்டு, திடீரென பக்தர்கள் அளித்த காணிக்கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளியேறினார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த வேணுவனலிங்கத்தை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ₹15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.