சென்னை: தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சிலர் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றி பூஜை செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் தீ கொளுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு ரூ. 1000 அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். எனவே, பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில், பயணிகள் ரயில்களில் கற்பூரம் ஏற்றுவதையோ, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால், ‘130’ என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.