வாஷிங்டன்: ‘டிரம்ப் பதவியேற்கும் முன், வளாகத்திற்கு திரும்பி விடுங்கள்’ என, அந்நாட்டில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை, டிரம்ப் பதவியேற்கும் முன், அமெரிக்க பல்கலைக் கழகங்கள் எச்சரித்துள்ளன. கடந்த மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
அவர் ஜனவரி 20-ம் தேதி பதவியேற்கிறார்.டிரம்ப் பதவியேற்ற பிறகு நிர்வாக ரீதியாக செயல்படுத்தப்படும் மாற்றங்கள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில், டிரம்ப் பதவியேற்பதற்கு முன் இந்தியா மற்றும் தங்களிடம் படிக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் திரும்பி வருமாறு அமெரிக்க பல்கலைக்கழகங்கள் எச்சரித்துள்ளன.
அவர் பதவியேற்ற பிறகு சர்வதேச பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் அல்லது தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம் அதன் சர்வதேச மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு கடிதம் அனுப்பியது.
அதில், ‘டிரம்ப் பதவியேற்பதற்கு முன் குளிர்கால இடைவேளையில் இருந்து வளாகத்திற்கு திரும்புங்கள். கடந்த 2016-ம் ஆண்டு டிரம்ப் ஆட்சியில் இருந்தபோது பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.‘‘இதுதொடர்பான முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வெஸ்லியன் மற்றும் யேல் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும் இது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், வெளிநாட்டு மாணவர் விசாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். பல முஸ்லீம் நாடுகளின் குடிமக்கள் மற்றும் வட கொரியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதையும் அவர் தடை செய்தார்.
இதனால் சில மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இம்முறையும் அவ்வாறானதொரு நிலை ஏற்படலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 54 சதவீதம் பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.