பொள்ளாச்சி: பெண் நர்சுகள் கழிவறையில் காமிரா வைத்த டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தனித்தனியாக உள்ளன.
நேற்று கழிவறைக்கு சென்ற பெண்நர்சுகள், கழிவறையில் காமிரா வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் பிரஸ்சில் பேனா காமிரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி நர்சுகள் ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்துவிடம் புகார் செய்தனர். அவரும், டாக்டர்களும் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பேனா காமிரா இருந்ததை உறுதி செய்தனர்.
பின்னர் அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அங்கு பயிற்சி ஆர்த்தோ டாக்டராக பணியாற்றும் வெங்கடேஷ் (33) என்பவர் கழிவறையில் பேனா காமிரா பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களை தவறாக சித்தரித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் வெங்கடேஷ் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வெங்கடேஷ் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.