புதுடெல்லி: டெல்லியில் கூட்டணி இருக்காது என ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதனால், அக்கட்சி தேர்தலை தனித்து சந்திக்க உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்ட நிலையில், அனைத்து தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது.
டெல்லியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, அரசியல் பேரணியில் அவர் மீது திரவம் ஊற்றப்பட்ட சம்பவம் பற்றி குறிப்பிட்டார்.
சட்டம் ஒழுங்கு விவகாரத்தில், அமித்ஷா சில நடவடிக்கைகளை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அதற்கு பதிலாக பாதயாத்திரையின்போது தாக்கப்பட்டேன். திரவம் ஊற்றியதில் தீங்கு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அது தீய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறியுள்ளார்.
வரவுள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரசுடனோ அல்லது இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடனோ கூட்டணியா? என நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், டெல்லியில் கூட்டணி இருக்காது என கூறியுள்ளார். இதனால், அக்கட்சி தேர்தலை தனித்து சந்திக்க உள்ளது.