சேலம்: சேலம் மாவட்டத்தில் நெல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர், ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நெல்லுக்கு அடுத்தபடியாக மரவள்ளிக்கிழங்கு, கரும்பு, மஞ்சள், உளுந்து, தினை, மக்காச்சோளம் ஆகியவை அதிகளவில் பயிரிடப்படுகின்றன. மேலும் தோட்டக்கலைப் பயிர்களும் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
பென்ஜால் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக ஏற்காடு, ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, தலைவாசல், மேட்டூர், ஓமலூர், டேனிஷ்பேட்டை பகுதிகளில் கனமழை பெய்தது. மூன்று நாட்களாக பெய்த மழையால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமானது.
அந்த வகையில் சேலத்தை அடுத்த கன்னங்குறிச்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். அந்த பகுதியில் பெய்த கனமழையால் நெற்பயிர்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பத்து நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கருகியதால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து கன்னங்குறிச்சி புது ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஏரி இப்பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரி நீர் ஆதாரமாக இருந்தாலும், நிரம்பி வழியும் காலங்களில் பயிர்கள் சேதமடைகின்றன. ஏரியை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. மற்ற விவசாய நிலங்களும் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளன.
இந்நிலையில் பென்ஜால் புயல் மழையால் ஏரிக்கு வரலாறு காணாத அளவு தண்ணீர் வந்தது. அதேபோல், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் கன்னங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் சேதமடைந்தன. குறிப்பாக இந்த பகுதியில் காற்று பலமாக வீசியது. காற்றும், புயலும் இணைந்து பெய்த கனமழையில் நெற்பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன.
இன்னும் 10 நாட்களில் அறுவடை செய்யலாம் என நினைத்து காத்திருந்தோம். ஆனால் நாங்கள் கடுமையாக உழைத்து பயிரிட்ட நெற்பயிர்களை பென்ஜால் புயல் முற்றிலுமாக அழித்துவிட்டது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இங்குள்ள பயிர் சேதத்தை அதிகாரிகள் மதிப்பீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.