தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு…
மொச்சைக்கொட்டை – 1/2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிது வதக்கி அரைப்பதற்கு…
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 8
பூண்டு – 10 பல்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
குழம்பிற்கு…
புளி – பெரிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 15 பல்
கறிவேப்பிலை – 1 கொத்து
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
கத்திரிக்காய் – 5 (நீளவாக்கில் கீறியது)
முருங்கைக்காய் – 1 (துண்டுகளாக்கப்பட்டது)
தண்ணீர் – 2 டம்ளர்
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மொச்சைக்கொட்டையை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி, நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய மொச்சைக்கொட்டையை குக்கரில் போட்டு, ஒரு 300 மிலி நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 7-8 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வதக்கி அரைப்பதற்கு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் மிளகு, சீரகம் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் தக்காளி, குழம்பு மிளகாய் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
அதன் பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். அடுத்து கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடம் கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 4 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் 2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, காய்கறிகள் வேக மூடி வைத்து 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும். காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் வேக வைத்த மொச்சைக்கொட்டை, புளிச்சாறு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மொச்சைக்கொட்டை புளிக்குழம்பு தயார்.